ஆழி திரைவிமர்சனம்
நாகர்கோவிலில் கப்பல் மெக்கானிக் என்ற போர்வையில் போதை மருந்து கடத்தும் கொள்ளையர் சரத்குமார். அவரின் ஒரே மகள் தேவிகா. தேவிகா மீது எளிய குடும்பத்தைச் சேர்ந்த இந்திரஜித் ஜெகஜித் காதல் கொள்கிறார். அந்தக் காதலை மூர்க்கமாக எதிர்க்கும் சரத்குமார் இந்திரஜித் ஜெகஜித்-ஐ கடத்திக்கொண்டு கடலுக்குள் செல்கிறார். கடலில் இருந்து அப்பாவி காதலன் காதலியின் அப்பாவிடமிருந்து கரை வந்தாரா.. காவு வாங்கப்பட்டாரா என்பதே படத்தின் மீதிக்கதை.
ரவுடித்தனம் நிரம்பிய மிரட்டல் வில்லனாக அசத்தியுள்ளார் சரத்குமார். அறிமுகமான காலத்திலே வில்லனாக நடித்த அனுபவம் அவரது நடிப்பில் பளீச்சிடுகிறது.
படத்தின் வில்லன் சரத்குமார் என்பதால் கிட்டத்தட்ட ஹீரோ ரேஞ்சில் வருகிறார் இந்திரஜித் ஜெகஜித். பெரும் போராட்டத்தைச் சந்திக்கும் சூழலில் இன்னும் ஆழமான நடிப்பை அவர் வெளிப்படுத்தியிருக்கலாம். நிறைய இடங்களில் வீக்-ஆக இருக்கிறார். நாயகி தேவிகா அழகாக இருக்கிறார். கிடைத்த சின்னச் சின்ன காட்சிகளிலும் நன்றாக நடித்துள்ளார்.
படத்தின் மற்றொரு ஹீரோவாக இருப்பவர் ஒளிப்பதிவாளர் ஆனந்த் நாயர். கடல் சார்ந்த காட்சிகளில் நல்ல காட்சியனுபவம் கிடைக்கிறது. இசையமைப்பாளர் ஜெஸ்ஸி கிப்ட் பின்னணி இசையில் நன்றாக கவனம் செலுத்தியுள்ளார். முன்பாதியில் வரும் காதல் மெலடி பாடலும் நல்ல கம்போசிங். CG ஓரளவு ஓகே ரகம்.
கதையாக படம் ரொம்பவே வீக். பணக்காரப் பெண்ணை காதலிக்கும் ஏழை பையன், அவனை ஒடுக்கும் பணக்கார அப்பா என்பது ‘ஓல்டிஸ் கோல்ட்’ அல்ல… ‘ஓல்டிஸ் ஓல்டு’. திரைக்கதையில் இன்னும் சுவாரஸ்யத்தை கூட்டியிருக்க வேண்டும். அங்கும் இயக்குநர் மாதவ் ராம்தாசன் பிடியை நழுவவிட்டுவிட்டார். ஒரு சர்வைவல் திரில்லராக பயணிக்கும் படத்தில் எமோஷ்னல் கனெக்டிங் ஏற்படவில்லை. இந்த ஆழியில் திக்கும் திசையும் தெரியவில்லை. மேக்கிங் மட்டும் நல்லா இருந்தால் போதும் என்பவர்கள் வேண்டுமானால் ஆழியில் இறங்கலாம்.
Comments
Post a Comment