ராட்ட - சினிமா விமர்சனம்
படத்தின் கதையின்படி, நாயகன் சக்திவேல் விசைத்தறி தொழிலில் தேர்ந்து விளங்கும் ஒரு உழைப்பாளி. அவர் வேலை செய்யும் தறிப்பட்டறையிலேயே சிறந்த தொழிலாளி என்ற பெயரை வாங்கும் அளவுக்கு உழைப்பை நேசிப்பவர். மகனுக்கு திருமணம் ஆக வேண்டும் என்பதற்காக அவரது அம்மா கோவில் கோவிலாக சென்று வேண்டிக் கொள்கிறார். இதற்கிடையில், அதே தறிப்பட்டறையில் வேலைக்கு சேரும் நாயகி ஹெலன், சக்திவேல் வீட்டுக்கு அருகிலேயே குடியேறுகிறார். ஒருவரை ஒருவர் காதலித்தாலும், அதை வெளிப்படையாக சொல்லிக் கொள்ளாமல் இருக்கிறார்கள்.
ஒரு கட்டத்தில் அந்த தறிப்பட்டறையின் முதலாளி சித்தா (தர்ஷன்), நாயகியை திருமணம் செய்ய விரும்பி தனது ஆசையை தெரிவிக்கிறார். அதை நாயகி மறுத்துவிட, சக்திவேலுடன் அவசர அவசரமாக திருமணம் நடைபெறுகிறது. திருமணத்திற்கு முன் சேமிப்பு பழக்கம் இல்லாத நாயகன், திருமணத்திற்கு பின் அத்தியாவசிய தேவைகளுக்கே கடன் வாங்கும் நிலைக்கு தள்ளப்படுகிறார். இந்த சூழலில் இருந்து நாயகன் – நாயகி எப்படி மீண்டு வருகிறார்கள்? உழைப்பின் மூலம் வாழ்வில் உயர்ந்தார்களா? சமூகத்தில் ஒரு நல்ல இடத்தை அடைந்தார்களா? என்பதே மீதிக்கதை.
படத்தின் டைட்டில் கார்டு வருவதற்கு முன்பே, அந்த சவுண்ட் டிசைன் மூலமாகவே ‘ராட்ட’ என்ற தலைப்பின் அர்த்தத்தை இயக்குனர் உணர்த்திவிடுகிறார். டப்பிங் செய்யப்பட்டிருந்தாலும், சிங்க் சவுண்ட் முறையில் படம் பார்த்த உணர்வை தருகிறது. முழுக்க முழுக்க நேச்சுரல் லைட்டிங்-ல், கிடைக்கும் உபகரணங்களை வைத்தே படமாக்கியிருக்கும் ஒளிப்பதிவாளர் வெற்றி பாராட்டுக்குரியவர். கிராமத்தின் அழகை அழகாக பதிவு செய்துள்ள கழுகுப் பார்வை காட்சிகள் கண்களுக்கு விருந்தாக அமைந்துள்ளன. எடிட்டர் லோகேஷ் பங்கும் அளப்பரியது. இருப்பினும், படத்தின் நீளத்தை சுமார் 15 நிமிடங்கள் குறைத்திருந்தால் இன்னும் கச்சிதமாக இருந்திருக்கும்.
மணி கிருஷ்ணன் இசை படத்தை ஒரு படி மேலே தூக்கி நிறுத்துகிறது.
‘வான் முகில்’ (நாயகன் அறிமுகப் பாடல்),
‘செவ்வழகி’ (காதல் பாடல்),
‘வாடாமல்லி’ (முதலிரவுப் பாடல்)
என அனைத்து பாடல்களும் எந்த வித இரைச்சலும் இன்றி இனிமையாக கேட்கும் வகையில் அமைந்துள்ளன. பின்னணி இசையும் காட்சிகளோடு ஒன்றியிருக்கிறது. படத்தை திட்டமிட்டபடி நிறைவு செய்ய நிர்வாக தயாரிப்பாளர் டாக்டர் மூதுரை பொய்யாமொழி அளித்த ஆதரவு குறிப்பிடத்தக்கது. விசைத்தறி கூடம், பொருட்காட்சி போன்ற படப்பிடிப்பு இடங்களே அதற்கு சாட்சி. எங்கு செலவு செய்ய வேண்டும், எங்கு பட்ஜெட்டை கட்டுப்படுத்த வேண்டும் என்பதில் தெளிவாக செயல்பட்டிருக்கிறார்கள்.
நாயகன் சக்திவேல் நாகப்பன், கிராமத்து எளிய மனிதராகவும், துடிப்பான இளைஞராகவும், வாழ்க்கையில் துவண்டு போகும் கணவனாகவும் பல பரிமாணங்களில் இயல்பான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். காதல் காட்சிகளில் ரசிக்க வைக்கிறார்; சிலம்பம் சுற்றும் காட்சிகளில் அசத்துகிறார்.
நாயகி ஹெலன், காதல் காட்சிகளிலும், குடும்பத் தலைவியாக மாறிய பின் கணவரை தேற்றும் காட்சிகளிலும் வாழ்க்கையின் யதார்த்தத்தை மிக அழகாக வெளிப்படுத்தி ஸ்கோர் செய்கிறார். குறிப்பாக அந்த தேர் கதை காட்சியில் கைதட்டல் வாங்குகிறார்.
‘சித்தா’ படத்தில் வில்லனாக மிரட்டிய சித்தா தர்ஷன், இங்கு புல்லட்டில் வந்து இறங்கும் முதலாளியாக கம்பீரம் காட்டுகிறார். நல்லவரா, கெட்டவரா என்ற குழப்பத்தை இறுதி வரை நம்முள் வைத்திருந்து, கடைசியில் நெகிழ வைத்து மனதில் பதிகிறார்.
சாப்ளின் பாலு, சந்திரன், கிருஷ்ணன், முத்துராஜா, பம்பாய் சுப்ரமணி, கல்பனா, வசந்தி, ஜெயஸ்ரீ, ரத்னா, செல்லம்மா உள்ளிட்ட மற்றவர்கள் நடிகர்கள் போல அல்லாமல், அந்த கிராமத்து மனிதர்களாகவே வாழ்ந்திருக்கிறார்கள்.
இயக்குனர் சக்திவேல் நாகப்பன், இன்றைய பரபரப்பான உலகத்தில் அமைதியான ஒரு தெளிந்த நீரோடை போல இந்த படத்தை வழங்கியிருக்கிறார். டாக்ஸிக் கலாச்சாரம் நிறைந்த இக்காலத்தில், முழுக்க முழுக்க நல்ல மனிதர்களையே கதாபாத்திரங்களாக கொண்டு வந்து ஒரு புத்துணர்வான அனுபவத்தை தந்திருக்கிறார். வில்லன், வன்முறை, வெட்டு–குத்து, ஆபாசம் எதுவும் இல்லாமல் மனதை வருடிச் செல்கிறது படம்.
ஒரு இடத்தில் கூட மனிதர்களை கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் செல்ஃபோன் காட்சிகள் இல்லை. ஆடம்பரமான கார், பைக் பந்தாவும் இல்லை. வாய்க்கால், வரப்பு, பம்பு செட் என கிராமத்து வாழ்வியலை குடும்பத்தோடு சென்று ரசித்து திரும்பும் உணர்வை தருகிறது ‘ராட்ட’.
Comments
Post a Comment