கலைப்புலி ஜி. சேகரன் அவர்களின் நினைவஞ்சலி கூட்டம்!
சென்னை:
சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்ட திரைப்பட விநியோகஸ்தர்கள் சங்க செயலாளராக இருந்த கலைப்புலி ஜி. சேகரன் மறைவையொட்டி, அவருக்கு நினைவஞ்சலி கூட்டம் நடைபெற்றது. இதில் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ். தாணு தலைமையில், சங்க நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் பங்கேற்று அஞ்சலி செலுத்தினர்.
சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்ட திரைப்பட விநியோகஸ்தர்கள் சங்கம் சார்பாக நடைபெற்ற இந்த நினைவஞ்சலி கூட்டத்தில், சங்க நிர்வாகிகள் கே. ராஜன், பி. அந்தோணி தாஸ், எஸ். நந்தகோபால், யு. தருண்குமார், செயற்குழு உறுப்பினர்கள் மற்றும் சங்க உறுப்பினர்கள் சிறப்புரையாற்றினர்.
நிகழ்ச்சியில் பேசிய கலைப்புலி எஸ். தாணு, “என் உடன் பிறவா சகோதரர் கலைப்புலி ஜி. சேகரன். 1973 காலக்கட்டத்தில் இருந்தே அவருடன் எனக்கு பழக்கம் உண்டு. அவருடன் பல நல்ல நினைவுகளும் சம்பவங்களும் உள்ளன. பல நேரங்களில் என் அலுவலகத்தில் மதிய உணவு சேர்ந்து சாப்பிட்டுள்ளோம். அவரது கதைகளைக் கேட்டு மெய்சிலிர்த்திருக்கிறோம். சேகரன் கதை சொன்னால் யாராலும் மறுக்க முடியாது. அந்த அளவுக்கு திறமையானவர். ரஜினி, கமல், பிரபுதேவா, கார்த்திக் போன்ற முன்னணி நடிகர்களுக்கு கதை சொல்லியிருக்கிறார். அவர் மருத்துவமனையில் இருக்கும் செய்தி அறிந்து நேரில் சென்று பார்த்தேன். அவர் வைத்த சில கோரிக்கைகளை நிறைவேற்றிக் கொடுத்தேன். அவரது மறைவு திரையுலகிற்கு ஈடு செய்ய முடியாத இழப்பு,” என்றார்.
கேயார் (KR) பேசுகையில், “பலரிடம் கருத்து வேறுபாடு இருக்கலாம். ஆனால், சேகரன் நினைவஞ்சலிக்கு இத்தனை பேர் ஒன்று சேர்ந்திருப்பது, அவர் எந்தளவுக்கு நல்லவர் என்பதை புரிய வைக்கிறது. அவர் சம்பாதித்த சொத்து இத்தனை நல்ல உள்ளங்கள்தான். சினிமா தவிர வேறு எதையும் பேச மாட்டார். தனது கஷ்டங்களை யாரிடமும் பகிர்ந்து கொள்ள மாட்டார். எல்லோரிடமும் நட்பு பாராட்டுவார். சிரித்த முகத்துடன் இருப்பார். இவை அவரிடம் கற்றுக்கொள்ள வேண்டிய பண்புகள். அவரது ஆன்மா சாந்தியடையட்டும்,” என்றார்.
இயக்குநர் வி. சேகர், “யாரிடமும் எந்தப் பிரச்சினையும் இல்லாதவர் சேகரன். இவரும் கலைப்புலி தாணுவும் நல்ல நண்பர்கள். சினிமாவில் உள்ளவர்கள் உடல் நலனில் கவனம் செலுத்த வேண்டும். வெற்றி, தோல்விகள் சகஜம்தான். அவரது ஆன்மா சாந்தியடைய வேண்டும்,” என்றார்.
ஜெய்குமார் மெட்ரோ, “கலைப்புலி ஜி. சேகரன் எங்களுக்கு நல்ல நண்பர். தீர்க்கமான கொள்கை உடையவர். விடாமுயற்சியால் விஸ்வரூப வெற்றி பெற்றவர். தனது கருத்தை ஊர்ஜிதமாகவும் தைரியமாகவும் முன்வைப்பவர். அவரது ஆத்மா சாந்தியடைய வேண்டும்,” என்று கூறினார்.
கே. ராஜன், “சேகரன் பிரிவை இன்னும் ஏற்க முடியவில்லை. சினிமாவைப் பற்றியே பேசிக் கொண்டிருப்பார். எல்லோரிடமும் நட்பு பாராட்டும் நல்ல மனம் கொண்டவர். அவர் மறைந்தாலும், அவரது நினைவுகள் எங்களை விட்டு நீங்காது,” என்றார்.
சங்க செயலாளரும் தயாரிப்பாளருமான எஸ். நந்தகோபால், “எப்போதும் சிரித்த முகத்துடன் இருப்பார் சேகரன். எங்களுக்கு நல்ல நண்பர். கடந்த விநியோகஸ்தர்கள் சங்க தேர்தலில் செயலாளர் பதவிக்கு என்னை போட்டியிட வைத்தவர் அவர்தான். அவரது பிரிவு எதிர்பாராதது. அவரது ஆசி எங்களை வழிநடத்தும்,” என்று உருக்கமாக பேசினார்.



Comments
Post a Comment