சரத்குமார் நடிக்கும் ‘ஆழி’ – இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது
சுப்ரீம் ஸ்டார் சரத்குமார் முக்கிய வேடத்தில் நடித்துள்ள ‘ஆழி’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் சிறப்பாக நடைபெற்றது. மலையாள இயக்குநர் மாதவ் ரமா தாசன் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த திரைப்படம், ஒரு கிரைம் திரில்லராக தயாராகியுள்ளது.
‘ஆழி’ திரைப்படத்தில் சரத்குமார், இந்திரஜித் ஜெகன், தேவிகா சதீஷ், வையாபுரி, தாமரைச்செல்வி, ஸ்ரீஜித் ரவி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஆனந்த் என். நாயர் ஒளிப்பதிவு செய்துள்ள இந்த படத்திற்கு ஜெஸ்ஸி கிப்ட் இசையமைத்திருக்கிறார். ஆஸ்கார் விருது பெற்ற ரசூல் பூக்குட்டி ஒலி வடிவமைப்பை மேற்கொண்டுள்ளார். 888 புரொடக்ஷன்ஸ் மற்றும் செல்லுலாய்ட் கிரியேஷன்ஸ் நிறுவனங்கள் சார்பில் சஜித் கிருஷ்ணன் தயாரித்துள்ள இப்படத்தை தமிழகம் முழுவதும் உத்ரா புரொடக்ஷன்ஸ் வெளியிடுகிறது. படம் பிப்ரவரி 27ம் தேதி முதல் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது.
இசை வெளியீட்டு விழாவில் தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை தலைவர் ரவி கொட்டரக்கரா, இயக்குநர் உதய சங்கரன், விநியோகஸ்தர்கள் அப்பாஸ் ஏ.ஜெ., ஹரி உத்ரா உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர். ரவி கொட்டரக்கரா படத்தின் இசையை வெளியிட, படக்குழுவினர் மற்றும் விருந்தினர்கள் பெற்றுக் கொண்டனர்.
விழாவில் பேசிய விநியோகஸ்தர் ஹரி உத்ரா, இன்றைய சூழலில் நல்ல படங்களை திரையரங்குகளில் வெளியிடுவது சவாலானதாக இருப்பதாக கூறினார். ‘ஆழி’ போன்ற தரமான கன்டென்ட் கொண்ட படம் திரையுலகில் மாற்றத்தை ஏற்படுத்தும் என நம்பிக்கை தெரிவித்தார். சரத்குமாரின் ரசிகராக இருந்து வந்ததாகவும், அவரின் படத்தை விநியோகிப்பதில் மகிழ்ச்சி அடைவதாகவும் கூறினார்.
நடிகை தாமரைச்செல்வி, இது தன்னுடைய முதல் மேடை அனுபவம் என்றும், இந்த வாய்ப்பை வழங்கிய இயக்குநர் மற்றும் தயாரிப்பாளருக்கு நன்றி தெரிவித்தார். நடிகர் வையாபுரி, நீண்ட இடைவெளிக்குப் பிறகு சரத்குமாருடன் இணைந்து நடித்தது மகிழ்ச்சி அளிப்பதாக கூறி, இப்படம் ரசிகர்களுக்கு வித்தியாசமான அனுபவத்தை தரும் என்றார்.
நடிகை தேவிகா சதீஷ், சரத்குமாரின் மகளாக நடித்த அனுபவத்தை பகிர்ந்து கொண்டு, படப்பிடிப்பு தளத்தில் அவர் ஒரு தந்தை போல் வழிகாட்டியதாக தெரிவித்தார். ரசூல் பூக்குட்டியின் ஒலி வடிவமைப்பு படத்தின் தரத்தை உயர்த்தும் என்றும் கூறினார்.
நடிகர் இந்திரஜித் ஜெகன், சரத்குமாருடன் பணியாற்றியது மறக்க முடியாத அனுபவம் என்றும், அவரது நேர்த்தி மற்றும் அர்ப்பணிப்பு இளம் நடிகர்களுக்கு ஒரு பாடமாக இருக்கும் என்றும் தெரிவித்தார்.
தயாரிப்பாளர் ரவி கொட்டரக்கரா, ‘ஆழி’ என்ற தலைப்பை சரத்குமாரின் நடிப்பின் ஆழத்துடன் ஒப்பிட்டு பேசினார். இந்த படத்தில் அவர் வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளதாகவும், ரசூல் பூக்குட்டியின் ஒலி வடிவமைப்பு படத்திற்கு பெரிய பலமாக இருக்கும் என்றும் குறிப்பிட்டார்.
இயக்குநர் மாதவ் ரமா தாசன், தமிழில் இயக்கும் தனது முதல் படமாக ‘ஆழி’ உருவாகியுள்ளதாக கூறினார். கதையின் பெரும்பகுதி கடலில் நடைபெறுவதால், ஒலி அமைப்பிற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளதாகவும், படத்தில் நாயின் கதாபாத்திரமும் முக்கிய பங்கு வகிப்பதாகவும் தெரிவித்தார்.
ரசூல் பூக்குட்டி பேசுகையில், சரத்குமாரின் ஒழுக்கமும் அர்ப்பணிப்பும் தன்னை கவர்ந்ததாக கூறினார். இந்த படத்தின் ஒலி அமைப்பில் அதிக உழைப்பு செலுத்தப்பட்டுள்ளதாகவும், தமிழ் சினிமாவின் தொழில்நுட்ப தரம் உலகளவில் வளர்ந்து வருவதாகவும் தெரிவித்தார்.
நடிகர் சரத்குமார் தனது உரையில், ‘ஆழி’ ஒரு வித்தியாசமான அனுபவத்தை தரும் படம் என கூறினார். ஆடல், பாடல் இல்லாவிட்டாலும், கதை மற்றும் உணர்வுகள் பிரம்மாண்டமாக இருக்கும் என்றும், நெகட்டிவ் ஷேடு கொண்ட கதாபாத்திரம் ரசிகர்களுக்கு புதிய அனுபவத்தை தரும் என்றும் நம்பிக்கை தெரிவித்தார். ரசிகர்கள் அனைவரும் திரையரங்குகளில் வந்து இப்படத்தை ஆதரிக்க வேண்டும் என கேட்டுக் கொண்டார்.
Comments
Post a Comment