லெவன் – திரை விமர்சனம்
கதை சுருக்கம்:
நவீன் ஒரு நேர்மையான, திறமையானபோலீஸ் அதிகாரி. எந்தவொரு வழக்கையும் சிறப்பாகக் கையாள தெரிந்தவர். இந்த நேரத்தில் சிட்டியில் தொடர்ச்சியாக சில கொலைகள் நடக்கத் தொடங்குகின்றன. ஒவ்வொரு முறையும், அந்த உடல்கள் எரிக்கப்பட்ட நிலையில் கிடைக்கின்றன.
இந்த வழக்கை முதலில் போலீஸ் அதிகாரி ஷாஷாங் விசாரிக்கிறார். ஆனால் எந்த முன்னேற்றமும் இல்லை. கொலைகள் தொடர்ந்தே இருக்கின்றன. அதற்குள் ஒரு விபத்தில் ஷாஷாங் சிக்கிக் கொள்கிறார். இதன் பிறகு இந்த வழக்கு நவீனிடம் வந்துசேருகிறது.
நவீனுடன் சப் இன்ஸ்பெக்டர் திலீபனும் சேர்கிறார். நவீன் தனது அனுபவத்துடன் விசாரணையை ஆரம்பிக்கிறார். கொலை வழக்கு படிப்படியாக ஒரு பெரிய மர்மத்தை வெளிப்படுத்த ஆரம்பிக்கிறது.
இதையெல்லாம் யார் செய்தார்கள்? ஏன் செய்தார்கள்? அந்த மர்மம் என்ன? என்பதே படத்தின் முக்கியக் கேள்வியாகிறது.
சிறப்பு :
நவீன் தனது கதாபாத்திரமான அரவிந்தனாக வாழ்ந்துள்ளார் . உடல் மொழி, பார்வை, வசனம் என அனைத்திலும் நன்கு பொருந்தியுள்ளார். ஆரம்ப சண்டை காட்சிகளே கதையை வேகமாக நகர்த்துகிறது.
ஷாஷாங், திலீபன் ஆகியோர் கதைக்கு வலுவான தூண்களாக இருந்துள்ளனர். நடிகை அபிராமி சிறப்புத் தோற்றத்தில் வந்து தனது கதாபாத்திரத்தை அழகாக செய்துள்ளார்,ஒரு தாயுள்ளத்தை வெளிப்படுத்தியிருக்கிறார்.
ப்ளாஷ்பேக் காட்சிகள் உணர்வுகளை கிளப்பி கண்களில் கண்ணீர் வரும் அளவுக்கு அமைந்துள்ளது. அந்த நபர் சைக்கோ கில்லராக உருவெடுத்த பின்னணி உண்மையாகவே நெஞ்சை தொடுகிறது.
இயக்குநர் லோக்கேஷ் அஜ்லஸ், ஒரு புதிய கதையை மிக நுட்பமாக கையாண்டு, சீரியல் கில்லிங் வெற்றி கதையாக அமைத்துள்ளார்.
தொழில்நுட்பம் மற்றும் இசை:
டி. இமான் இசையில் "விடியாத வானம்" பாடல் உணர்வுகளை தொட்டுக்கொண்டே போகிறது. பின்னணி இசை இப்படத்திற்கு ஒரு சிறப்பான வலிமை.
ஒளிப்பதிவாளர் கார்த்திக் அசோகனின் பணியும், எடிட்டிங், கலை இயக்கம் ஆகியதும் படத்தை உயர்த்தியிருக்கின்றன
மற்ற நடிகர்கள்:
இளைய கதாபாத்திரங்கள் படத்திற்கு தகுந்த அடித்தளமாக இருந்தனர். ரித்விகா, ரேயாஹரி, ஆடுகளம் நரேன், அர்ஜய் ஆகியோர் தங்களுக்குத் தகுந்த நடிப்பை வழங்கியுள்ளனர்.
படத்தின் குறைகள்:
கதாநாயகி ஒரு கதாபாத்திரமாக இருந்திருந்தால் படம் இன்னும் சிறந்திருக்குமென்றே தோன்றுகிறது. காதல் பாடல் ஒன்று படத்தில் தேவையற்ற இடத்தில் சேர்க்கப்பட்டிருப்பது ஒரு மைனஸ்.
மொத்தத்தில்:
"லெவன் – இரகசியம் கலந்த ஒரு இன்வஸ்டிகேஷன் திரில்லர்!"
வெறும் சீரியல் கில்லிங் படம் மட்டுமல்ல, உணர்வுகளும், சிந்தனையும் கலந்து இருக்கும் ஒரு முயற்சியாக ‘லெவன்’ பார்க்கக்கூடிய ஒரு தரமான படமாக அமைந்துள்ளது. இயக்குநர் லோக்கேஷ் அஜ்லஸ் தனது முதல் படத்திலேயே கவனிக்கத் தக்கவர் என்பதையும் நிரூபித்திருக்கிறார்

Comments
Post a Comment