Devil’s Double Next Level - திரை விமர்சனம்


கதைக்களம்

கிஷா என்ற பெயரில் சந்தானம், சினிமாக்களை கலாய்த்து விமர்சனம் செய்ய, அவரது விமர்சனங்களால் பல படங்கள் தோல்வியடைகின்றன. இதனால், இயக்குநராக இருந்த ஒருவர் கொலை செய்யப்பட்டு, தியேட்டர் ஒன்றில் பேயாக மாறுகிறார். அந்தப் பேய், விமர்சகர்களை "ஸ்பெஷல் ஷோ" என்ற பெயரில் அழைத்து கொல்கிறது. சந்தானத்தின் குடும்பத்தையும் அந்த தியேட்டருக்கு வரவழைத்து, திரையில் ஓடும் படத்திற்குள் அவர்களை சிக்க வைக்கிறது. அந்தப் படத்தில் சைக்கோ கில்லர், பேய் உள்ளிட்ட கதாபாத்திரங்கள் தோன்ற, சந்தானம் தன் குடும்பத்தை காப்பாற்றி, படத்திலிருந்து உண்மை உலகத்திற்கு திரும்பினாரா என்பது மீதிக்கதை.

படம் எப்படி இருக்கு ?

சந்தானம் தனது வழக்கமான காமெடி வண்டியை ஓட்டி வருகிறார், ஆனால் இந்த முறை அந்த வண்டி பெட்ரோல் தீர்ந்து நின்றுவிட்டது போல உணர்கிறது. படத்திற்குள் சந்தானம் மாட்டிக்கொள்ளும் தருணத்தில் திரைக்கதை சுவாரஸ்யமாகத் தொடங்கினாலும், பின்னர் வரும் காட்சிகள் "இதுதானா அடுத்து நடக்கப்போகிறது?" என்ற எண்ணத்தைத் தோற்றுவிக்கின்றன.

தில்லுக்கு துட்டு படத்தில் முதல் பாதி மந்தமாக இருந்தாலும், இரண்டாம் பாதி காமெடியால் கலகலப்பாக இருக்கும். ஆனால், இந்தப் படத்தில் காமெடி ஆரம்பம் முதலே கிளிக் ஆகவில்லை. முதல் பாதியில் சந்தானம் மற்றும் மொட்டை ராஜேந்திரன் தாய்மொழி பேசுவதை மொழிபெயர்க்கும் காட்சி, மஞ்சுமல் பாய்ஸ் ரீகிரியேட் செய்யப்பட்ட காட்சி, இரண்டாம் பாதியில் நிகழ்ஸ் ரவியை பேய் புத்தகம் படிக்க வைக்கும் காட்சிகள் ஆகியவை சிரிப்பை வரவழைக்கின்றன. ஆனால், இவை தவிர சந்தானத்தின் ஒன்-லைனர்கள் பல இடங்களில் சிரிப்பை வரவழைக்கத் தவறுவது ஏமாற்றமளிக்கிறது.

சந்தானத்தைத் தாண்டி, லொல்லு சபா மாறன், கௌதம் மேனன், ரெடின் கிங்ஸ்லி ஆகியோரின் நடிப்பு கவனிக்க வைக்கிறது. மொட்டை ராஜேந்திரன் ஒரு எலியிடம் மாட்டி சிலையாக நிற்கும் காட்சி முதல் கிளைமாக்ஸின் எமோஷனல் தருணங்கள் வரை தனது பாத்திரத்தை அழகாக செய்திருக்கிறார். ஆனால், கஸ்தூரி மற்றும் யாஷிகாவின் கிளாமர் காட்சிகள் தேவையற்றவையாக உணர்கின்றன. குடும்பப் பார்வையாளர்களை மனதில் கொண்டு இத்தகைய காட்சிகளைத் தவிர்த்திருக்கலாம்.

தொழில்நுட்ப அம்சங்கள்

ஒளிப்பதிவு, "படத்திற்குள் படம்" என்ற கான்செப்ட்டிற்கு ஏற்ப, ஹாரர் மற்றும் திரில்லர் ஜானர்களுக்கு பொருத்தமாக அமைந்துள்ளது. ஆனால், இசை ஓரளவு DJ மிக்ஸ் போல உணர வைக்கிறது, பின்னணி இசையாக முழுமையாக ஒட்டவில்லை.


ப்ளஸ் 

இரண்டு முதல் மூன்று காமெடி சீக்வன்ஸ்கள் சிரிப்பை வரவழைப்பது.  

"படம் நன்றாக இருந்தால் ஓடும்" என்ற கருத்தை கதையாக்கிய விதம்.


மைனஸ் 

காமெடி என்றாலும், ஒரு கட்டத்தில் கிளைமாக்ஸ் எப்போது முடியும் என்ற எண்ணம் தோன்றுவது. 

முந்தைய DD பாகங்களின் காமெடி தரத்தை இந்தப் படத்தில் மிஸ் செய்கிறோம்.


மொத்தத்தில்

DD சீரிஸில் இதுவரை வந்த படங்களில், ஹாரரும் குறைவு, காமெடியும் குறைவு என்றால், அது இந்த Devil’s Double Next Level தான். சந்தானத்தின் வழக்கமான ரசிகர்களுக்கு ஓரளவு பொழுதுபோக்கு அளிக்கலாம், ஆனால் புதிய எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யவில்லை.


Comments

Thandora Talkies

கானா உலகநாதன் முக்கிய வேடத்தில் — “ஐயம்” திரைப்படம்!

ராட்ட - சினிமா விமர்சனம்

படைத்தலைவன் திரைவிமர்சனம் - ஒரு பார்வை

சப்தம்’ படப்பிடிப்பில் அமானுஷ்ய விஷயங்களை உணர்ந்தேன்” ; நடிகர் ஆதியின் அதிர்ச்சி அனுபவம்