லாக்கடவுன் - திரைவிமர்சனம்
2020 லாக்டவுன் காலத்தில் ஒரு மிடில் கிளாஸ் பெண்ணின் வாழ்க்கையில் நிகழும் அசம்பாவிதமும், அதற்கான தீர்வும்தான் இந்த படத்தின் மையக் கதைக்களம்.
குடும்பச் சூழல் காரணமாக கட்டாயமாக வேலை பெற்றே ஆக வேண்டிய நிலைமையில் இருக்கும் நாயகி அனுபமா பரமேஸ்வரன், வேலை தேடி அலைக்கிறார். அத்தகைய ஒரு சந்தர்ப்பத்தில் யாரும் எதிர்பாராத ஒரு அசம்பாவிதம் அவருக்கு நேர்கிறது. அதை குடும்பத்தினருக்கு தெரியாமல் மறைக்க முயல்கிறார். அந்த அசம்பாவிதம் என்ன? அதைத் தொடர்ந்து திடீரென அறிவிக்கப்படும் லாக்டவுன் காரணமாக அவர் எதிர்கொள்ளும் புதிய சிக்கல்கள் என்ன? என்பதுதான் படத்தின் மீதிக் கதை.
ஒன் வுமன் ஆர்மியாக படத்தை முழுவதும் தூக்கிச் சுமந்திருக்கிறார் அனுபமா பரமேஸ்வரன். கண்களில் குறும்புத்தனம் மின்னும் காட்சிகளிலும், அதற்குப் பிறகு சோகமே ததும்பும் காட்சிகளிலும் ஆழமான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். சார்லி வழக்கம்போல தனது பங்களிப்பைச் சிறப்பாக செய்துள்ளார். சர்ப்ரைஸாக நிரோஷோ, எமோஷனல் காட்சிகளில் பார்வையாளர்களை உலுக்கும் நடிப்பை வழங்கியுள்ளார். தோழியாக வரும் பிரியா வெங்கட் மனதில் நிற்கும் வகையில் தனது கதாபாத்திரத்தை பதிவு செய்துள்ளார். இயக்குநர் ஏ.ஆர்.ஜீவாவும் ஒரு முக்கியமான கேரக்டரில் தோன்றுகிறார்.
ரகுநந்தனின் இசை கதையின் ஓட்டத்தோடு ஒத்துச் செல்கிறது. பாடல்கள் ஒகே ரகம். KA. சக்திவேலின் ஒளிப்பதிவு இயல்பாக காட்சிகளை ஈர்க்கிறது. நிறைய டூ ஷாட்ஸ், மிட் ஷாட்ஸ் மூலமாகவே கதையின் உணர்வுகளை பார்வையாளர்களிடம் கடத்துகிறார்.
“விபரம் அறியாமல் செய்யும் தவறு வேறு. தனக்குத் தவறு நடந்திருப்பதே தெரியாமல் ஒரு பெண் தவித்தால் நிலைமை என்னவாகும்?” என்ற உண்மைச் சம்பவத்தை அடிப்படையாக கொண்டு திரைக்கதையை அமைத்துள்ளார் ஏ.ஆர்.ஜீவா. படத்தின் ஆரம்பகட்ட காட்சிகள் சற்று லைட் வெயிட்டாக நகர்கின்றன. 30-ஆவது நிமிடத்தில் படம் வேகம் எடுத்து, ஒரு நல்ல பாயிண்டில் இன்டர்வல் வருகிறது. ஆனால் அதற்குப் பிறகு நடக்கும் காட்சிகள் யூகிக்கக்கூடியதாகவும், வழக்கமான டெம்ப்ளேட்டாகவும் அமைந்துள்ளன. கோவிட் காலத்தில் நாம் சந்தித்த பல சம்பவங்களை படம் கண்முன் கொண்டு வருவது லேசான அதிர்வை ஏற்படுத்துகிறது.
இரண்டாம் பாதியை இன்னும் வலிமையாக வடிவமைத்திருக்கலாம் என்ற குறை உள்ளது.
மொத்தத்தில், பெரிய சோர்வை தராத படம் என்று நிச்சயமாக சொல்லலாம்.
மதிப்பெண்: 3/5
Comments
Post a Comment