கப்பிள் பிரண்ட்லி – திரை விமர்சனம்



நீண்ட நாட்கள் கழித்து திரையில் ஒரு காதல் வேர் பிடித்து, கிளை விரித்து, நிழல் தந்த அதிசயம் நிகழ்ந்துள்ளது. சமீபத்திய பல காதல் படங்கள் தராத ஒரு நிறைவை இந்த படம் நமக்குத் தருகிறது என்பதே உண்மை.
வீடுகளுக்கு இன்டீரியல் (Interior) வேலைகள் எடுத்து முன்னேற வேண்டும் என்ற ஆசையுடன் சென்னை வருகிறான் நாயகன். வாழ்க்கை அவனை வறுமையால் சோதிக்கிறது. அதே சமயம், ஐடி துறையில் வேலை பெற்று வாழ்க்கையை முன்னேற்ற வேண்டும் என்ற கனவுடன் வேலை தேடி அலைகிறாள் நாயகி. இருவரும் ஒரு இக்கட்டான சூழலில் சந்திக்கிறார்கள்.
நாயகியின் வருகைக்குப் பிறகு நாயகனின் வாழ்க்கை மேல்நோக்கி நகரத் தொடங்குகிறது. கனவுகள் வேரூன்றி நிம்மதியின் நிழல் பரவத் தொடங்கும் நேரத்தில் திடீரென ஒரு இருள்மேகம் அவர்கள் வாழ்க்கைக்குள் புகுந்து விடுகிறது. அந்த இருள் கலைந்ததா? காதல் வென்றதா? என்பதே மீதிக் கதையின் கரு.

கதையின் நாயகனாக Santhosh Shoban தனது கதாபாத்திரத்தில் முழுமையாக வாழ்ந்துள்ளார். தெலுங்கு நடிகர் என்றாலும் சில காட்சிகளிலேயே நம்மூரு பையன் போல மனதில் ஒட்டிக்கொள்கிறார்.
நாயகியாக Manasa Varanasi அபாரமான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். முதல் பாதியில் கண்களை குளிர வைக்கும் சிரிப்பால் ரசிக்க வைக்கும் அவர், பின்பாதியில் கண் கலங்க வைக்கும் உணர்ச்சிகளையும் அற்புதமாக வெளிப்படுத்துகிறார்.
Yogi Babu வருகை படத்திற்கு இனிமையான சிரிப்பு மைலேஜை கொடுக்கிறது. Sunil Reddy உள்ளிட்ட மற்ற நடிகர்களும் தங்களுக்கான கதாபாத்திரங்களுக்கு நியாயம் சேர்த்துள்ளனர்.

ஒளிப்பதிவாளர் Dinesh Purushothaman எதார்த்தத்தை மீறாத காட்சிகளை கண்களுக்கு விருந்தாக அளித்துள்ளார். இசையமைப்பாளர் Aditya Ravindran இந்தப்படத்தின் இன்னொரு ஆன்மா. பின்னணி இசையும் பாடல்களும் மனதை நிரப்புகின்றன.
மிக இயல்பாக நகரும் இந்த படம் ஒரு பெண் தனியாக நகரத்தில் வாழ்வதற்கான போராட்டத்தையும், நம்பிக்கை இருந்தால் எதுவும் சாத்தியம் என்ற ஹோப்பையும் தருகிறது. அதேசமயம், துணையை உயர்த்தி நிறுத்துவது காதலின் பெரிய பொறுப்பு என்பதையும் உணர்த்துகிறது.

ஒருவரின் உயரத்தில் அருகில் இருப்பது காதலா?
அல்லது துயரத்தில் உயிரோடு கலந்திருப்பதுதானா உண்மையான காதல்?
இந்த கேள்விக்கு அழகான பதிலாக நிற்கிறது “கப்பிள் பிரண்ட்லி”.
காலம் மாறினாலும் காதல் மாறாது என்பதை உண்மையாய் பேசியிருக்கும் ஒரு மனதை வருடும் காதல் திரைப்படம்.

மதிப்பீடு: 3.5 / 5 ⭐

Comments

Thandora Talkies

கானா உலகநாதன் முக்கிய வேடத்தில் — “ஐயம்” திரைப்படம்!

ராட்ட - சினிமா விமர்சனம்

படைத்தலைவன் திரைவிமர்சனம் - ஒரு பார்வை

சப்தம்’ படப்பிடிப்பில் அமானுஷ்ய விஷயங்களை உணர்ந்தேன்” ; நடிகர் ஆதியின் அதிர்ச்சி அனுபவம்