மீசையமுறுக்கு 2 - திரை விமர்சனம்
மூன்று தலைமுறைகளின் இசைப் போராட்டம்... வென்றதா?
முதல் பாகம் தொட்ட இடத்தை இந்தப் பாகமும் தொட முடியும் என்ற நம்பிக்கையுடன் களமிறங்கியுள்ளார் ஹிப்ஹாப் தமிழா.
ஓப்பன் பண்ணா 1979! மயிலாப்பூர் வகையறாக்களின் கட்டுப்பாட்டில் இருக்கும் பாட்டு, இசை, கச்சேரி, சபா என்கிற இசையுலகிற்குள் நுழைய, ராயபுரம் வகையறாவைச் சேர்ந்த ஹிப்ஹாப் தமிழா முயற்சிக்கிறார். ஆனால், எளிய மனிதரான அவரை அந்த சிஸ்டம் அவ்வளவு எளிதாக அனுமதிக்கவில்லை.
கட் செய்தால் 2026. இன்னொரு ஹிப்ஹாப் தமிழா இசைஞர், கவிஞர், பாடகர் என முப்பரிமாணங்களோடு சினிமாவுக்குள் முயற்சி செய்கிறார். இதற்கிடையில் 1990-களில் வரும் ஹிப்ஹாப் தமிழாவுக்கும் தனக்கென ஒரு கதை இருக்கிறது.
1979-ல் வரும் ஹிப்ஹாப் தமிழா வயதானவராக கருணாஸ் நடிக்கிறார். 90-களில் வரும் ஹிப்ஹாப் தமிழா கதாபாத்திரத்தை மிடில் ஏஜ் தோற்றத்தில் பாபா பாஸ்கர் ஏற்றுள்ளார். இப்படி மூன்று காலகட்டங்களில், மூன்று தலைமுறைகளின் முயற்சியும் போராட்டமும் இறுதியில் வென்றதா என்பதே படத்தின் கதை.
ஹீரோ மெட்டீரியலாக ஹிப்ஹாப் தமிழா!
கதையின் நாயகன் அந்தஸ்தைவிட கதாநாயகன் அந்தஸ்துதான் பெரிது என மாஸ் காட்டியுள்ளார் ஹிப்ஹாப் தமிழா. பல காட்சிகளில் மாஸ் ஹீரோ மெட்டீரியலாகத் தெரிகிறார். ஆனால் எமோஷனல் காட்சிகளில் இன்னும் கொஞ்சம் கவனம் செலுத்தியிருக்கலாம்.
கருணாஸை இன்னும் ஆழமாகப் பயன்படுத்தியிருக்கலாம். அவரது கதாபாத்திரத்திற்கு இன்னும் அதிகமான எமோஷனல் ஸ்பேஸ் கொடுத்திருந்தால் படத்தின் தாக்கம் கூடியிருக்கும்.
நாசர், பக்ஸ், கருணாகரன், ஹர்ஷத் கான் உள்ளிட்ட அனைத்து கேரக்டர் ஆர்ட்டிஸ்ட்களும் தங்களுக்குக் கிடைத்த வாய்ப்பில் ஸ்கோர் செய்துள்ளனர்.
நாயகிகளாக வரும் சைத்ரா ஜே. ஆச்சார், கேதிகா ஷர்மா, ரம்யா ரங்கநாதன் மூவரும் நல்ல தேர்வு. மூவருமே தங்களது கதாபாத்திரங்களை சிறப்பாக கையாண்டுள்ளனர்.
விஷுவலும் இசையும் பலம்!
ஒளிப்பதிவாளர் பாலாஜி சுப்ரமணியம் தரமான விஷுவல்களை கொடுத்துள்ளார். மூன்று காலகட்டங்களுக்கான லைட்டிங் வேரியேஷனை சிறப்பாகக் கையாண்டிருப்பது கவனிக்க வைக்கிறது.
ஹிப்ஹாப் தமிழா தனது இசையில் அதீத கவனம் செலுத்தி உழைத்துள்ளார். பாடல்கள் ஏற்கனவே ஹிட் என்பதால், படம் பார்க்கும்போது அந்தப் பாடல்கள் இன்னும் அதிகமாக வைப் ஏற்றுகின்றன.
திரைக்கதையில் இன்னும் ஆழம் தேவை
ஒடுக்கப்பட்ட பின்னணியில் இருந்து எழ முயலும் மூன்று தலைமுறை மனிதர்களின் போராட்டங்களை சொல்ல முயன்றுள்ளார் இயக்குநர் ஹிப்ஹாப் தமிழா.
ஆனால், மூவரின் வாழ்க்கையையும் இயல்பாகவும் அழுத்தமாகவும் திரைக்கதையில் கோர்க்கத் தவறியுள்ளார். குறிப்பாக, சங்கமம் படத்தில் மணிவண்ணன் கதாபாத்திரம் போல, கருணாஸ் கதாபாத்திரத்தையும் இன்னும் ஆழமான கேரக்டராகப் படைத்திருந்தால் எமோஷனல் ஏரியா இன்னும் வலுவாக இருந்திருக்கும்.
2026-ல் வரும் ஹிப்ஹாப் தமிழா கதாபாத்திரத்தில் ஆழமும் அடர்த்தியும் இல்லாதது படத்தின் பெரும் மைனஸ்.
இருந்தாலும், கடைசி 20 நிமிடங்கள் படம் நமக்குள் பெரும் பாசிட்டிவிட்டியைப் பரப்புகின்றன.
“காலம் தாழ்ந்தாலும் திறமை ஒரு நாள் வென்றே தீரும்” என்ற ஒற்றை மெசேஜுக்காக மீசையை முறுக்கிவிடலாம்!
Comments
Post a Comment