பாரடைஸ் - திரை விமர்சனம்
சினிமா பாரடைஸ்னு ஒரு உலக சினிமா உண்டு! எதுக்காகச் சொல்றேன்னா… சரி, இந்த பாரடைஸுக்கு வருவோம்.
இந்தியாவுக்குச் சுதந்திரம் கிடைத்தாலும், ஆந்திராவில் குறிப்பிட்ட ஒரு இன மக்களுக்கு மட்டும் விடுதலை கிடைக்கவில்லை. ஒரு சமஸ்தானத்தின் கீழ் மக்கள் பெரும் கொடுமைகளை அனுபவிக்கிறார்கள். ஹீரோ நானியின் அம்மா, நானியை வயிற்றில் சுமந்தபடியே அந்த வல்லாதிக்கத்திற்கு எதிராகப் போராடுகிறார். ஆனால் கொடூர வில்லன் அவரை சிறுமைப்படுத்துகிறான். கடினமான சூழலில் தாயின் வயிற்றிலிருந்து பிறக்கும் நானி, வளர்ந்த பின் தாயின் சபதத்தை நிறைவேற்றினாரா? என்பதுதான் படத்தின் ஒரு முக்கியக் கதை. இதற்குள் இன்னும் பல கதைகளும் கிளைக்கின்றன.
இந்தப் படத்திற்காக ஒரு பேயுழைப்பைப் போட்டிருக்கிறார் நானி. குறிப்பாக சண்டைக்காட்சிகளில் அவர் எடுத்திருக்கும் ரிஸ்க் அளப்பரியது. எமோஷனல் காட்சிகள் வலிமையாக இல்லாவிட்டாலும், அவரின் நடிப்பில் எந்தக் குறையும் இல்லை. அவரின் தாயார் கதாபாத்திரமும், அந்தக் கதாபாத்திரத்தில் நடித்தவரின் நடிப்பும் அல்டிமேட்.
கயாது லோஹர் நடிப்பைப் பற்றிச் சொல்லணுமா என்ன? அந்த அழகு தேவதை கணநேர ஷாட்களில் தரும் தரிசனமே போதாதா? வில்லன்கள் இருவரும் மிரட்டியிருக்கிறார்கள். கீர்த்தி சுரேஷ் ஒரு பாடலுக்கு வந்து செம்ம குத்தாட்டம் போட்டிருக்கிறார்.
படத்தின் பெரிய ஹீரோவாக பேக் தி கேமராவில் இருப்பது கேமராமேன்தான். அவரின் பிரம்மாண்டமான விஷுவல்ஸ் மிரட்டுகின்றன. வரைகலை வேலைப்பாடும் கவனிக்க வைக்கிறது. ஆங்காங்கே தூங்கிவழியும் படத்தை தாங்கிப்பிடித்து கரை சேர்க்கிறார் நம்ம அனிருத். பாடல்களிலும் நல்ல வைப்.
ஆனால், பான்-இந்தியா படங்களின் வொர்ஸ்ட் வரிசையில் அமைந்துள்ள கதைதான் இந்தப் படத்தின் கதையும். எமோஷனல் கனெக்டிங்கில் மொத்தமாக கோட்டை விட்டிருக்கிறார் இயக்குநர் ஸ்ரீகாந்த் ஒடிலா.
எடுக்கப்பட்ட காட்சிகள் எல்லாம் பிரமாதமாக இருக்கின்றன. ஆனால் அந்தக் காட்சிகளுக்குள் இருக்கும் கதை மற்றும் உணர்வுகள் நம்மை முழுமையாகக் கனெக்ட் செய்யவில்லை.
ஆக, விஷுவல்களை விரும்புபவர்கள் மட்டும் இந்தப் படத்தை என்ஜாய் பண்ணலாம்.
கண்களுக்கு விருந்து… ஆனால் மனதுக்கு முழு விருந்து இல்லை!
Comments
Post a Comment