டோரோதி - திரை விமர்சனம்
டோரதி: பிற்போக்கு மனிதர்களுக்கு முற்போக்கு உலகை கற்பிக்கும் அசாத்திய சினிமா
மனித உறவுகள் அமைய மனது தீர்மானித்தால் போதும். பிறர் என்ன நினைப்பார்கள் என்பதைப் பற்றி யோசிக்கத் தேவையில்லை என்பதை அழுத்தமாகச் சொல்லும் படைப்பு டோரதி.
சனந்த், ரிஷிகாந்த் இருவரும் சிறு வயது முதலே நண்பர்கள். “ஆண் என்றால் கெத்து” என்கிற எண்ணத்துடன் வளர்கிறார் சனந்த். அவரால் ஈர்க்கப்படும் சாந்தமான ரிஷிகாந்தும் காலப்போக்கில் வீரதீர ஆணாக மாறுகிறார். இவர்களது நட்புக்கு சாதி தடையாக இல்லாவிட்டாலும், சாதி வெறி கொண்ட சனந்தின் தந்தை முத்துக்குமாருக்கும் அவரது இரு அண்ணன்களுக்கும் ரிஷிகாந்த் மீது வெறுப்பு இருக்கிறது.
சனந்தின் அண்ணன் செளந்தர்ராஜாவின் மனைவியாக கீர்த்தி சுரேஷ் வருகிறார். அதன் பின்னர் சனந்த், அவரிடம் அளவற்ற அன்பை வெளிப்படுத்துகிறார். அதன் பிறகு நிகழும் அதிர்ச்சிகளும், உறவுகளுக்குள் உருவாகும் முரண்பாடுகளும் கதையை வேறொரு தளத்திற்குக் கொண்டு செல்கின்றன.
பாலின வேறுபாட்டைச் சுற்றிய வெறுப்புக்கும், மனிதர்களை மனிதர்களாகப் பார்க்கும் பேரன்புக்கும் இடையிலான போரில் யார் தோற்கிறார்கள்? என்பதே திரைக்கதையின் மையக் கேள்வி.
நடிப்பு
கதாநாயகியாக கீர்த்தி சுரேஷ் போர்ட்ரெய்ட் செய்யப்பட்டாலும், அவர் படத்தில் கேமியோ ரோல் போலவே குறைவான நேரமே தோன்றுகிறார். ஆனால் அந்தச் சில காட்சிகளிலும் அழுத்தமான நடிப்பை வழங்கியிருக்கிறார்.
சனந்த் கதையின் நாயகனாக மிளிர்கிறார். அவர் இனி எத்தனை படங்களில் நடித்தாலும், டோரதி அவரது திரைப்பயணத்தில் காலத்திற்கும் பேசப்படும் படமாக இருக்கும்.
ரிஷிகாந்த், இயலாமை, குற்றவுணர்ச்சி உள்ளிட்ட உணர்வுகளை முகத்தில் மிக அடர்த்தியாக வெளிப்படுத்தி அசர வைக்கிறார்.
முத்துக்குமார் மற்றும் செளந்தர்ராஜா இருவரும் பார்வையாளர்களின் வெறுப்பைச் சம்பாதிக்கும் அளவுக்கு தங்கள் கதாபாத்திரங்களில் ஒன்றிப்போயிருக்கிறார்கள். அந்த அளவுக்கு இயல்பான நடிப்பை வழங்கியுள்ளனர்.
ஒளிப்பதிவு
கேமராமேன் திருவை இந்த வாரப் படங்களின் வின்னர் என்று அறிவித்துவிடலாம்.
படம் முழுவதும் கேமரா வெறுமனே காட்சிகளைப் பதிவு செய்யவில்லை. அது கதையையே பேசுகிறது. ஒவ்வொரு பிரேமும் கதாபாத்திரங்களின் உணர்வுகளோடு பயணிக்கிறது.
இசை
இளையராஜா ஒரு நாளும் பழையராஜா ஆகமாட்டார் என்பதற்கு இந்த டோரதியும் சாட்சி.
சில காட்சிகள் அவரது இசையால் மட்டுமே முழுமையான உணர்வைப் பெறுகின்றன. குறிப்பாக “முத்துமணி” பாடல் இடம்பெறும் இடம் ஒரு கிளாசிக் தருணம்.
இயக்கம் மற்றும் எழுத்து
எழுத்தாளர் சு. சமுத்திரம் எழுதிய ‘வாடாமல்லி’ நாவலில் ஒரு திருநங்கையின் வாழ்க்கை மிகுந்த வலியோடு பதிவு செய்யப்பட்டிருக்கும். அந்த வலியை விடவும் வலிமையாக, காட்சிகளின் வழியே ஒரு உயிரின் போராட்டத்தைச் சொல்லியிருக்கிறார் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ்.
ஒவ்வொரு கதாபாத்திரத்திற்குமான எழுத்திலும் தெரியும் உழைப்பு அசர வைக்கிறது. அதைவிட, மேக்கிங்கில் அவர் காட்டியிருக்கும் அக்கறையும் அழகியலும் வியக்க வைக்கின்றன.
உருவத்தில் ஆணாகவும், உள்ளத்தில் பெண்ணாகவும் உணரும் ஓர் உயிரை மனிதனாகக்கூட மதிக்காமல் கடந்த ஒரு தலைமுறையின் நெற்றியில் அடித்து கேள்வி கேட்கிறாள் டோரதி.
படம் முடிந்த பின்னரும் வரும் கடைசி பத்து நிமிடங்களை கமர்சியல் அம்சத்தைக் கருத்தில் கொண்டு வெட்டியிருக்கலாம் என்ற எண்ணம் தோன்றுகிறது. ஆனால், படத்தின் கதைக்கு அதுதான் சரியான முடிவு என்பதால் அந்த முடிவை ஏற்றுக்கொள்ள வேண்டியிருக்கிறது.
இறுதியாக...
டோரதி ஒரு திரைப்படம் மட்டுமல்ல.
மனிதர்களை அவர்களின் உடல், பாலினம், சாதி அல்லது சமூகத்தின் பார்வையால் அளவிடாமல், அவர்களின் மனதை வைத்து புரிந்துகொள்ள வேண்டும் என்று கேள்வி கேட்கும் படைப்பு.
டோரதி... தமிழ்சினிமா வரலாற்றில் என்றென்றும் நின்று பேசும் அசாத்திய சினிமா.
Comments
Post a Comment