Dark Heaven - விமர்சனம்
5 தொடர் கொலைகளும்... திகில் விசாரணையும்!
தொடர்கொலைகளும், அதைத் தொடர்ந்து நடைபெறும் பரபரப்பான விசாரணையும்தான் இந்தத் திரில்லர் படத்தின் மையக்கரு.
இன்றைய தென்காசி மாவட்டத்தில் அமைந்துள்ள மேக்கரைதான் கதையின் களம். பெரும்பாலான கதை 2007-ஆம் ஆண்டில் நடைபெறுகிறது. அப்போது மேக்கரை திருநெல்வேலி மாவட்டத்தின் கீழ் இருந்தது.
மேக்கரையில் ஒவ்வொரு ஏழு ஆண்டுகளுக்கு ஒருமுறை ஆண்கள் மட்டும் மர்மமான முறையில் கொல்லப்படுகிறார்கள். அப்படியொரு ஏழாண்டு கொலை சீசனில், ஹீரோ தனது மனைவி மற்றும் குழந்தையுடன் அந்த ஊருக்கு இன்ஸ்பெக்டராக வருகிறார்.
அவர் வந்த பிறகும் தொடர் கொலைகள் தொடர்கின்றன. இந்தக் கொலைகளுக்குப் பின்னால் இருப்பது யார்? அதன் பின்னணி என்ன? ஹீரோ அதை எப்படிக் கண்டுபிடிக்கிறார்? என்பதுதான் படத்தின் மீதிக்கதை.
நடிப்பில் இன்னும் கவனம் தேவை
நாயகன் சித்து இன்னும் நடிப்பில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். பல காட்சிகளில் விரைப்பாக நிற்பதையே நடிப்பு என நினைத்துவிட்டாரோ என்ற எண்ணம் வருகிறது. குறிப்பாக எமோஷனல் காட்சிகளில் இன்னும் இயல்பான நடிப்பை வழங்கியிருக்கலாம்.
தர்ஷிகா அழகாக இருப்பதுடன், தனக்குக் கிடைத்த கதாபாத்திரத்தையும் இயல்பாகச் செய்துள்ளார்.
ரித்விகா தனது அனுபவத்தை நடிப்பாக மாற்றி அசத்தியுள்ளார். நிழல்கள் ரவி, ஜெயக்குமார் உள்ளிட்ட நடிகர்களும் தங்கள் பங்களிப்பை சிறப்பாகச் செய்துள்ளனர்.
படத்தின் ஒரிஜினல் ஹீரோ!
ஒளிப்பதிவாளர் மணிகண்டன் BK தான் இப்படத்தின் ஒரிஜினல் ஹீரோ என்று சொல்லலாம்.
மேக்கரை மீது படர்ந்திருக்கும் இருளின் அடர்த்தியை தனது கேமரா மூலம் சிறப்பாகக் காட்சிப்படுத்தியிருக்கிறார். படத்தின் சூழலையும் அதன் திகில் உணர்வையும் அதிகரிக்கும் வகையில் அமைந்துள்ள அவரது பிரேமிங்குகள் கவனம் ஈர்க்கின்றன.
இசையமைப்பாளர் சக்தி பாலாஜி, படத்திற்குத் தேவையான திரில்லிங் உணர்வை தனது பின்னணி இசையின் மூலம் சரியாகக் கொடுத்துள்ளார்.
முன்பாதி விறுவிறுப்பு... பின்பாதி தடுமாற்றம்
தொடர் கிரைம், அதைச் சார்ந்த விசாரணை, விசாரணையின்போது அடுத்தடுத்து நிகழும் திருப்பங்கள் என முன்பாதியை மிகவும் இன்ட்ரஸ்டிங்காகக் கொடுத்திருக்கிறார் இயக்குநர் பாலாஜி.
ஆனால் பின்பாதியில் கதை பல திசைகளில் சுற்றத் தொடங்குகிறது. குறிப்பாக மெயின் கேரக்டருடன் பார்வையாளர்களுக்கு போதுமான எமோஷனல் பாண்டிங் உருவாகவில்லை.
மேலும், ஹீரோ கேரக்டர் போதுமான ஸ்மார்ட்னஸ் இல்லாமல் வடிவமைக்கப்பட்டிருப்பதும் திரில்லர் படத்தின் தாக்கத்தைக் குறைக்கிறது.
திரைக்கதை எழுத்தில் இன்னும் கொஞ்சம் ஆழமும், கதாபாத்திரங்களுக்கு வலுவான வடிவமைப்பும் கொடுத்திருந்தால், இந்தப் படம் இன்னும் மிரட்டலான திரில்லராக அமைந்திருக்கலாம்.
ஜஸ்ட் மிஸ்!
தொடர்கொலை, மர்மம், விசாரணை, திருப்பங்கள் என திரில்லர் படங்களை விரும்புபவர்கள் ஒருமுறை பார்க்கலாம்.
Comments
Post a Comment